
அரை ரீலில் வந்து போக வேண்டிய சிறுவயது பிளாஷ்பேக், ரீல் கணக்கில் போகிறது. சிறு குழந்தைகளான நாயகனும் நாயகியும் நட்பு வளர்க்கிறார்கள். அறியாத பருவத்தில் அழுத்தமான ஏதோ ஒன்று. ஊரைவிட்டே போகப் போகிற அவளை தங்கள் ஊரிலேயே இருக்க வைக்கிறான் சிறுவன், செல்வாக்கான தன் தாத்தா உதவியுடன்.
தோல் பாவை கூத்து நடத்தும் அந்த குடும்பத்திற்கு வீடு, மற்ற உதவிகள் என்று பேரனுக்காக செய்யும் தாத்தா இடையில் என்ன செய்தார் என்பதை ஒரு டயலாக்கில் போட்டு தாக்கிவிட்டு போகிறார் இயக்குனர். (சொரேர்...) வாலிபத்தில் அதே தோழியை காதலியாக்கிக் கொள்கிற ஜெய் ஒரு சந்தர்ப்பத்தில் தனது அன்பை தெரிவிக்க தவறான வழியை கையாள, குடும்பமே சிதறிப் போகிறது. உயிருக்குயிராக நேசித்த காதலியை தேடி அவன் தெரு தெருவாக திரிவதுதான் கதை. கண்டுபிடிப்பதுதான் க்ளைமாக்ஸ்.
முதல் து£ரல் நந்தகிக்குதான். அகன்ற அழகான கண்களால் நிறைய பேசுகிறார். பேசாமல் முறைத்துக் கொள்ளும் ஜெய்யிடம் தானும் முறைப்பு காட்டாமலிருப்பது செஞ்சோற்று கடன் என்பதையும், காதல் என்பதையும் டயலாக் இல்லாமலே சொல்கிறது அவரது முகம். எல்லாவற்றையும் இழந்து அம்மாவையும் இழந்து கிடக்கையில் லேசாக விம்முகிறது தியேட்டர். அவர் மீண்டும் கிடைக்கும்போது ஒரு ஃபீலிங் வரணுமே? அதுதான் மிஸ்சிங்.
ஜெய் ஹோ என்று சொல்ல ஆசைதான். ஆனால் சொல்ல விடமாட்டேன் என்கிறது ஜெய்யின் நடிப்பு. அடிக்கடி திரையில் வந்து போகிறது ஒரு குண்டியாட்டி குருவி. அது நடிக்கிற நடிப்பு கூட ஜெய்யிடம் இல்லாதது துரத்திருஷ்டம். அதே நேரத்தில் தமிழ்சினிமாவுக்கு அற்புதமான இரு நடிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். தாத்தா தியோடர் பாஸ்கரனும், தோல்பாவை கூத்து கலைஞர் வீர.சந்தானமும். அதிலும் பசியாற்ற வீடு வீடாக செல்லும் சந்தானம், தன் மேளத்தை எதிர்பார்ப்போடு அடித்து ஏமாற்றத்தோடு திரும்புகிற காட்சிகள்.
நவீனத்தின் கையில் சிக்கிக் கொள்கிற பழைய கலைகள் பற்றி அதிக வசனம் இல்லாமல் ஒரு சர்க்கஸ் லைட்டின் மூலமே சொல்லிவிடுகிறார் அறிமுக இயக்குனர் மீரா கதிரவன். படம் நெடுகிலும் இப்படி பல காட்சிகள். கேரக்டர்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்திருப்பதையும் பாராட்ட வேண்டும். ஆனால் பின்பாதியில் அந்த சாமர்த்தியம் இல்லாமல் தடுமாறி நிற்கிறது அவரது வித்தைகள்.
விஜய் ஆன்ட்டனியின் இசை புது ஸ்டைல்தான். வேறு யாராவது இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்குமோ என்ற எண்ணமும் வந்து தொலைக்கிறது.
தேட வேண்டியது தமிழரசியையும், இரண்டாம் பாதியில் தொலைந்து போன கொஞ்சம் ஸ்கிரிப்ட் பேப்பர்களையும்...
உங்க விமர்சனம் நல்லா இருக்கு. ஆனால் காலம் மாறும்போது கலைகளும் மாறித்தானே வருகின்றன.
ReplyDeleteஎன்ன செய்வது?