
ஆட்டையை போடுவது முதல் ஆளைப் போடுவது வரை எதையும் அசால்டாக செய்யும் நான்கு கிராமத்து விடலைகளின் நகரத்து விஜயம்தான் படத்தின் ஒன் லைன். இதில் சாதி வெறி எனும் அவலத்தை நுழைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். எண்ணம் ஓகேதான், ஆனால் படமாக்கிய விதம்...?
சின்ன டவுசருடன் டாப்லெஸ்ஸாக சேரிக்குள் திரியும் ஹரிஷ், கோபால், அலெக்ஸ், லோகேஷ் மாத்தியோசியின் முக்கிய உறுப்பினர்கள். நடிக்க வைப்பதற்குப் பதில் குளோசப்பில் அலறவிட்டே வெறுப்பேற்றுகிறார்கள். இவர்கள் காலனி சிறுவர்களுடன் சேர்ந்து வேனை கொள்ளை அடிப்பதும், போலீஸ் வந்ததும் கபடி விளையாடுவது போல் போக்குகாட்டுவதும், அப்படியே சிட்டி ஆஃப் காட் படத்திலிருந்து உருவியிருக்கிறார்கள்.
கோவில் தேரை சேரி சிறுமி துடைத்ததற்காக ஊர் பிரசிடெண்ட் அவளை தண்டிக்கும் போது படம் சாதி வெறி எனும் வேறு ரூட்டுக்குள் நுழைகிறது. ஆஹா, ஏதோ சொல்லப் போறாங்க என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், தண்டனை தகராறு என்று நண்பர்கள் நாலு பேரையும் நகரத்துக்கு வண்டியேற்றுவதுடன் திரைக்கதை சுணங்கிவிடுகிறது.
கதையில் திடீரென்று நுழையும் ஷம்முவுக்கு எந்தப் பின்னணியும் இல்லை. பன்னுக்கே வழியில்லாத நண்பர்களிடம் ஷம்மு ஆஸ்திரேலியா செல்ல இரண்டு லட்சம் கேட்பதும், அவர்களும் சின்சியராக பண வேட்டைக்கு புறப்படுவதும் திரைக்கதையின் சின்னபுள்ளத்தனம்.
இதையெல்லாம் சகித்துக் கொள்ளலாம் என்பது போலிருக்கிறது நண்பர்களின் மாத்தியோசிக்கும் காட்சிகள். காதலியின் வீட்டில் கல்லெறிவதற்குப் பதில் அவளுக்கு முத்தம் கொடுப்பது, தங்களிடம் முறைக்கும் போலீஸ்காரருக்கு மொட்டை அடிப்பது, கத்தியை காட்டுகிறவனிடம் பாம்பை காட்டி பணம் பறிப்பது... சத்தியமா நம்புங்கையா, படத்தில் இயக்குனர் மாத்தியோசித்திருக்கும் காட்சிகள்தான் இவை. காட்சிகள் இப்படியென்றால் அதற்கு முன்னால் வரும் மமமமமா மச்சான் மாத்தியோசி பாடல்... இந்த வருடத்தின் இரிட்டேட்டிங் நாய்ஸ் பொல்யூஷன்.
நகரத்துக்கு வந்த பிறகு கதை நகரவேயில்லை. போலீஸ் அதிகாரியான பொன்னவண்ணன் கிரிமினல்களான நண்பர்களிடம் கொலை செய்வதற்கான கொட்டேஷன் கொடுக்கிறார். அதற்கு அவர் சொல்லும் பிளாஷ்பேக் காரணம் கர்ண கொடூரம்.
சேரி சின்ன பெண் சூதனமா போய்ட்டு வாங்க என்று அடைவைஸ் மழை பொழிவது, நண்பர்கள் ஷம்முவை வார்த்தைக்கு வார்த்தை ஆத்தா என்று உருகுவது என காட்சிக்கு காட்சி வறுக்கிறார்கள். ரவிமரியாவின் பெண்மை கலந்த மிரட்டலும், தள்ளுவண்டி பிச்சைக்காரனின் சூர்யா மிமிக்ரி காதலும் எரிச்சலுக்கு நடுவில் வரும் இளைப்பாறல்கள்.
மெதுவா மெதுவா, மாத்தியோசி (இது வேறு மாத்தியோசி) பாடல்களை ஒருமுறை கேட்கலாம். பின்னணி இசை என்ற பெயரில் குரு கல்யாண் செய்திருப்பது பெரும் சத்தம். பாவம் அவரும் என்ன செய்வார். எடிட்டர் கோலா பாஸ்கர், கலை இயக்குனர் இருவரின் உழைப்பும் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. படத்தின் இன்னொரு குவாலிட்டியான அம்சம் ஒளிப்பதிவு.
மாத்தியோசி - இயக்குனர் நேராகவே நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது.
எதையோ மாத்தி யோசிச்சிருப்பாங்கண்டு படத்தை பார்த்தால் எல்லோரும் யோசிச்சதை தான் டைரக்டரும் யோசிச்சிருக்கர் ஆரம்ம்ப வசனம்களும் காட்சி அமைப்பும் பார்க்கும்போது என்னமோ சொள்ளப்போரங்கள் என்று பார்த்தால் டைரக்க்டர் நிறைய யோசிச்சு பின்னர் எதுக்கு ரிஸ்க் என்று கடைசில எல்லாத்தையும் விட்டுட்டு எல்லோர் மாதிரியும் போயுள்ளார் நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்
ReplyDelete